சுண்டல் என்றாலே என் நினைவுக்கு வருவது கோயில் பிரசாதம் தான் .நான் சென்னையிலருந்து விழுப்புரம் செல்லும் பேருந்தில்,இந்த சுண்டல் விற்கும் ஆசாமியை கண்டு ஆச்சரியப்பட்டதுண்டு,உலகத்திலேயே,பேருந்தில் பயணச்சிட்டு பெற்றுக்கொண்டு சுண்டல் விற்கும் நபர் இவராகத்தான் இருப்பார்.கிட்டதட்ட ஒரு வருடம்,நான் பணிக்கு சென்ற காலத்தில்,இவரை தினமும் பார்த்ததுண்டு,என்னுடன் தினமும் பயணிக்கும் நண்பரிடம்," சுண்டல் சாப்பிடலாமா" என்று கேட்டதற்கு,"வேண்டாம்,ஹைஜினிக்கா (hygienic)இருக்காது" என்றார்.சின்ன வயதில்,என் தந்தையும் இதைத்தான் சொல்வார்,அதனாலேயே ,பேருந்து,ரயில் பயணங்களில்,அதிகம் தின்பண்டங்கள் அனுபவித்ததில்லை.
பள்ளி பருவத்தில்,என்னுடைய இரு நண்பர்களின் விட்டிற்கு அருகாமையில் பிள்ளையார் கோயில்,அக்கோவிலில் கொடுக்கப்படும் சுண்டல்களை இவர்கள் தவறவிட்டதில்லை,சுண்டல் தின்ன அனுபவத்தை அடுத்த நாள் வகுப்பறையில் சொல்லும் போது,எரிச்சல்லாக இருக்கும்,அந்த கோயில் இருக்கும் தெருவில் தான் நானும் வசிக்கிறேன் ,ஆனால் எனக்கு மட்டும் சுண்டல் அட்டவனை தெரியாது.சில வருடங்களில் ஊர் மேய ஆரம்பித்ததும்,நானும் அந்த பிள்ளையார் கோயில் சுண்டலை விட்டதில்லை.
சுண்டலுக்கு,என்னிடம் இன்னொரு கதை உண்டு,தினமும் மாலையில்,எங்கள் தெருவில் ,தள்ளு வண்டியில் ஒருவர் சுண்டல் விற்பார்.அவருடயை சிறப்பே ,மாங்காய் துவள் தான்.நான் கேட்கும் போதெல்லாம் அப்பா வாங்கி கொடுப்பார்,ஆனால் என்னுடைய துருதிஷ்டம்,அந்த சுண்டல் விற்பவருக்கு யானைக்கால் வியாதி,அதனாலேயே அவரிடம் சுண்டல் வாங்குபவரின் எண்ணிக்கை குறைந்தது,காலபோக்கில் அவரையும் காணவில்லை.அவருடைய இடம் இன்னமும் காலியாகவே உள்ளது.எனக்கு தெரிந்து,சுண்டல் விற்பவர்கள் அரிது.எப்போதாவது,"இந்தா,கோயில் பிரசாதம்"என்று அம்மா கொடுத்தால்தான்.
இன்று காலை,பேருந்து பயணத்தின் போது,அதே சுண்டல் ஆசாமி,வழக்கம் போல்,பயணச்சிட்டு பெற்றுக்கொண்டு சுண்டல் விற்க ஆரம்பித்தார்.சுத்தம் பற்றி பேச யாருமில்லை,யோசித்தேன்,முதல் ஆளாய்,சுண்டல் என்றேன்,அவர் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி,எனக்கு மனதில் மகிழ்ச்சி.சுண்டல் சுவையாக இருந்தது,அது சுண்டலின் சுவையோ? அல்லது ஒரு வருடமாக தள்ளி போட்ட விசயத்தை,செய்து விட்ட சுவையோ?