சத்தியமா! இந்த வலைபதிவுக்கும்,தினமலர் டீ கடை பெஞ்சுக்கும் சம்பந்தம் இல்லை.ஆனால்,தினமலரின் டீக்கடை பெஞ்சை விட அதிக கிசுகிசு,அரட்டை,சண்டை இருக்கும் நானும் என் நண்பர்களும் செல்லும் டீக்கடையில்.கல்லூரியில் படித்த அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு ஆஸ்தான டீ கடை இருக்கும்,ஆனால் எனக்கும் என் நண்பர்களுக்கும் பள்ளி படிக்கும்போதே ஒரு டீ கடையை பிடித்துக்கொண்டோம்.பள்ளிக்கு செல்வதற்கு கூட சீக்கிரம் எழுந்திரிக்கும் பழக்கம் இல்லாத எனக்கு,டீ கடைக்கு செல்வதென்றால் அலறிகடிகாரம் இல்லாமலே எழுந்துவிடுவேன்.பள்ளி காலத்து டீக்கடை அனுபவங்களை விட சுவாரசியமானது கல்லூரி காலத்து அனுபவங்கள்.சென்னை சென்ற புதிதில் தெருவுக்கு பத்து டீக்கடைகள் இருப்பது ஆச்சரியமாகவே இருந்தது,சென்னை பழகிய பிறகு,பத்து இல்லை,நூறு கடைகள் இருந்தாலும் போதாது என்று அறிந்துக்கொண்டேன்.
சமிபத்தில்,சென்னை கல்லூரியில் படிக்கும் நண்பனின் தம்பியிடம் பேசி கொண்டிருக்கும்போது,அவனுக்கும் ஒரு நல்ல டீக்கடை அமைந்ததை பற்றி சொல்லிகொண்டிருக்கும் போது தான் எனக்கும்,என் கல்லூரி காலத்து டீக்கடை நினைவுகள்.கல்லூரிக்கு எதிரில் ஒரு டீக்கடை,கல்லூரியிலிருந்து அறைக்கு செல்லும் வழியில் ஒரு டீக்கடை,அறைக்கு அருகில் ஒரு டீக்கடை என மொத்தம்மூன்று டீக்கடைக்கு நான் வாடிக்கையாளன்.வழியில் இருக்கும் டீக்கடையில் தான் அதிகம் நேரம் கழித்ததுண்டு,கல்லூரிக்கு மட்டை போட்டு,எதிரில் இருக்கும் கடையில் உட்கார முடியாது.ஆனால்,கல்லூரிக்கு எதிரில் இருந்த டீக்கடையில் இருந்த சமதர்மம்(சோசியலிசம்) ஆச்சரியமானது,ஆசிரியர்களும்,மாணவர்களும் சமமாக புகை பிடிக்கும் இடம் அது.ஒரு முறை,புகை பிடித்து கொண்டிருந்த நண்பன்,ஆசிரியர் வருவதை கண்டு சிகரெட்டை கிழே போட்டு விட்டான்,அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை,பாடத்தில் தோல்வியுற்றால் கூட அப்படி திட்டி இருக்கமாட்டார்.ஆனால்,அந்த பாதி சிகரெட் வீனா போனதுக்கு திட்டினார்.அந்த சம்பவத்துக்கு பிறகு,ஆசிரியரை கண்டால் யாரும் சிகரெட்டை அணைப்பதில்லை,அவரை பார்த்து ஒரு புன்முறுவல் அவ்வளவு தான். அந்த கடையில்,பால் ஆவியை விட,சிகரட் ஆவி தான் அதிகம் இருக்கும்.சில நேரங்களில்,கல்லூரிக்கே போகாமல்,டீக்கடையிலேயே பொழுதை கழித்திருக்கிறோம்.
வழியில் இருக்கும் டீக்கடையும்,சும்மா இல்லை,எனக்கு தெரிந்து சென்னையில் மதியம் 2 மணிக்கே பஜ்ஜி போடும் கடை அதுவாக தான் இருக்கும்,அதுவும் எங்களுக்காக,இத்தனைக்கும் கடன் சொல்லி தான் சாப்பிடுவோம்.ஒரு டீ,ஒரு சிகரெட்டுக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அரட்டை,ஆனால் கடைக்காரர் மூஞ்சி சூழித்ததே கிடையாது.மறுபடியும்,டீக்கடையில்,நண்பர்களுடன் அரட்டை அடிக்க ஆசை.கல்லூரி நாட்களின்,வகுப்பறை நினைவுகளைவிட டீக்கடை நினைவுகள் தான் அதிகம்.